பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவித்திருக்கிறார் அந்நாட்டின் அதிபர் கத்ரீனா என்.சகெல்லரோபவுலோ.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, தங்கள் நாட்டுக்கு வரும்படி, கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் “பிரிக்ஸ்” உச்சி மாநாட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து கிரீஸ் செல்ல பிரதமர் மோடி முடிவு செய்தார். இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு கிளம்பவதற்கு முன்பு, கிரீஸ் பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதவில், “கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் அழைப்பின் பேரில் ஏதென்ஸ் நகருக்குச் செல்கிறேன். இந்தப் பழமைவாய்ந்த பூமிக்கு நான் செல்வது இதுவே முதல் முறை.
இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்கிற பெருமையும் எனக்கு உண்டு. நமது இரண்டு நாகரிகங்களுக்கு இடையிலான தொடர்புகள் 2,000 ஆண்டுகளுக்கும் மேலானவை. நவீன காலத்தில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்முகத்தன்மை ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளால் நமது உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம், மக்களுக்கு இடையிலான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பு இரு நாடுகளையும் நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. கிரேக்கத்திற்கான எனது பயணம் நமது பன்முக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், இன்று காலை கிரீஸ் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. ஏதென்ஸ் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படியும், அரசு மரியாதையுடனும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கிரீஸ் அதிபர் கத்ரீனா என். சகெல்லரோபவுலோவை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான “கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்” விருதை அந்நாட்டின் அதிபர் கத்ரீனா சகெல்லரோபவுலு வழங்கினார். இந்த விருது கிரீஸ் நாட்டின் 2-வது உயரிய விருதாகும். பொதுவாக, இந்த விருது கிரீஸ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் தலைவர்களுக்கு வழங்கப்படும். அதன்படி, தற்போது பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கிரீஸ் நாட்டுத் தரப்பில் கூறுகையில், ‛‛இந்திய மக்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் துணிச்சலாக சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்தியா மீது கிரீஸ் மக்கள் நல்ல மரியாதையை வைத்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 1983-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கிரீஸ் நாட்டிற்குச் சென்றார். அதன் பிறகு, 40 ஆண்டுகள் கழித்து தற்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிற்குச் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.