ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 33 கேலோ இந்தியா விளையாட்டு மையங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “ராஜஸ்தான் மாநிலத்தில் பிரத்யேக விளையாட்டு அறிவியல் மையத்துடன் கூடிய தேசிய உயர்திறன் சிறப்பு மையம் அமைக்கப்படும். மேலும், கூடுதலாக 18 கேலோ இந்தியா மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் இம்மாநிலத்தில் உள்ள கேலோ இந்தியா மையங்களின் எண்ணிக்கை 51 ஆக உயரும்.
கேலோ இந்தியா விளையாட்டு மையங்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும். பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படும். மேலும், விளையாட்டுத் துறையில் அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.
எனவே, விளையாட்டுத் துறையில் தொலைநோக்குப் பார்வையுடன் மாநில அரசுகளும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படும்போது இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் கிடைக்கும். கேலோ இந்தியா திட்டம் மற்றும் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் ஆகியவற்றின் வெற்றி கடந்த சில ஆண்டுகளில் தெரியவந்துள்ளது.
ஒலிம்பிக், பாராலிம்பிக், காமன்வெல்த் போன்ற சர்வதேச போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
20 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த உலக சாம்பியன் பட்டத்தை ஆன்டிம் பங்கல் 2 முறை வென்று வரலாறு படைத்திருக்கிறார்.
உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாராட்டுக்குரியது. கடந்த 60 ஆண்டுகளில் உலக பல்கலைக்கழக விளையாட்டுக்களில் அதிகபட்சமாக இந்தியாவுக்கு ஒரு ஆண்டில் 18 பதக்கங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், இந்தாண்டு மட்டும் 26 பதக்கங்களை வென்றிருக்கிறோம்” என்றார்.
நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அசோக் சந்த்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.