பரியா விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
மடகாஸ்கர் தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நேற்று விளையாட்டு போட்டி ஒன்றின் தொடக்க விழா நிகழ்ச்சி பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைக் காண ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விழாவினைக் காணும் ஆர்வ மிகுதியில் மைதானத்தின் பிரதான நுழைவாயிலின் வழியாக ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முயன்றனர்.
இதனால் மைதானத்தின் நுழைவாயில் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஏராளமானவர்கள் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்கள் மீது ஏறி மிதித்தபடி பலரும் மைதானத்திற்குள் சென்றதால் 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மடகாஸ்கர் நாட்டின் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். பரியா மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கானக் காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியானது அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.