அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. கடந்த 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் நிறைவடையாத காரணத்தினால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இதற்குப் பின்னர், பணிகள் நிறைவடைந்து கடந்த 19-ந் தேதி தண்ணீர் மீண்டும் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், இன்று காலை பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியிலிருந்து 1800 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெற உள்ளது.
பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு 500 கன அடியும், காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 500 கன அடியும், குடிநீருக்காகப் பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி பசானத்திற்காக 2,900 கன அடியும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டமானது, தற்பொழுது 81.25 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 378 கன அடியாகவும் உள்ளது. இந்நிலையில், அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது.