உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆட்டத்தை தவிர மற்ற அணிகள் மோதும் ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தவிர்த்து மற்ற அணிகள் மோதும் 36 லீக் ஆட்டங்கள் மற்றும் இந்திய அணி இல்லாத 8 பயிற்சி ஆட்டங்கள் ஆகியவற்றுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. www.bookmyshow.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று ஐ.சி.சி. அறிவித்திருந்தது. உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் டிக்கெட் வாங்க இரசிகர்கள் ஆன்லைனில் முயற்சித்ததால் 30-40 நிமிடங்களுக்கு அந்த இணையதளம் முடங்கிப்போனது. இதனால் டிக்கெட் வாங்க ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
விளையாடும் அணிகள், நடக்கும் இடம் ஆகியவற்றை பொறுத்து டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூபாய் ஆயிரமாகும். இது தவிர ரூ.1,500, ரூ.2,000, ரூ.3,000, ரூ.6.000 ஆகிய விலைகளிலும் விற்கப்படுகிறது.
அதே சமயம் லக்னோ மைதானத்தில் நடக்கும் ஆட்டங்களுக்கான டிக்கெட் ரூ.499-ல் தொடங்கி ரூ.900, ரூ.1,100, ரூ.1,500 ஆகிய விலைகளில் விற்கப்படுகிறது. இங்கு ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா-இலங்கை, நெதர்லாந்து-இலங்கை, நெதர்லாந்து- ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் ஆட்டங்களும் நடக்கின்றன. இன்னும் சில மைதானங்களில் ரூ.500, ரூ.600, ரூ.750 ஆகியவை குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் நடக்கும் ஆட்டங்களுக்கு டிக்கெட் விலை ரூ.1,000-ல் இருந்து ஆரம்பமாகிறது.
இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மற்றும் இரு பயிற்சி ஆட்டத்துக்கான ஆன்லைன் டிக்கெட் ஒவ்வொரு இடங்களுக்கு ஏற்ப வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னையில் நடக்கும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் வருகிற 31-ஆம் தேதியும், அகமதாபாத்தில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டத்துக்கான டிக்கெட்கள் வருகின்ற 3-ஆம் தேதியும் விற்கப்படும். இந்திய அணிக்குரிய டிக்கெட்டுகள் வாங்க உள்நாட்டு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் அது சீக்கிரம் விற்று தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் செப்.15-ஆம் தேதி விற்கப்பட உள்ளது.