பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூபாய் 2.69 கோடி கிடைத்துள்ளது.
முருகனின் ஆறுப்படை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாம் படை வீடாக உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானப் பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனைப் பல்வேறு வகைகளில் செலுத்துகின்றனர். குறிப்பாக, தங்கம், பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கையானது உண்டியலில் நிரம்பியவுடன், திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், வெள்ளிப் பொருட்கள், தங்கம், வெளிநாட்டு பணம் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து எண்ணுவர்.
இந்நிலையில், நேற்று கோயில் உண்டியலிலிருந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் கோயில் மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கோயில் ஊழியர்களின் உதவியுடன் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை மூலம் 2 கோடியே 69 லட்சத்து 29 ஆயிரத்து 944 ரூபாயும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 826 கரன்சி நோட்டுகளும் காணிக்கையாகக் கிடைத்தன. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், சிறிய வேல் உள்ளிட்ட 925 கிராம் மதிப்பிலான தங்கப்பொருட்களும், 12 கிலோ 162 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களும் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றுள்ளது.