மேற்குவங்கத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்குவங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் தத்தாபுகூர் நீல்கஞ்ச் பகுதியில் 2 மாடி கட்டடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்திருக்கிறது. இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை சுமார் 10.40 மணியளவில் அந்த பட்டாசு ஆலைக் கட்டடம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதையடுத்து, தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். எனினும், இச்சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே 7 பேரும், மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்து விட்டார்கள்.
அதேசமயம், சிகிச்சை பெறுபவர்களில் பலரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், விபத்தில் பலியான பலரது உடல் அக்கம்பக்கத்து கட்டங்களில் சிதறிக் கிடப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதேபோல, இந்த வெடி விபத்தில் அருகிலிருந்து சில வீடுகளும் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன.
இச்சம்பவம் குறித்து மேற்குவங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ரத்தின் கோஷ் கூறுகையில், “வெடி விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இது பட்டாசுகள் தயாரிக்கப்படும் பகுதி அல்ல. இங்கிருந்து வெகு தொலைவில் உள்ள நீல்கஞ்ச்சின் நாராயண்பூர் பகுதியில்தான் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றையும் காவல்துறையினர் மூடிவிட்டனர்” என்றார்.
மேற்குவங்க மாநிலத்தில் பட்டாசு வெடிவிபத்து நடப்பது இது முதல்முறை அல்ல. கடந்த மே மாதம் மிட்னாபூர் மாவட்டத்தில் நடந்த பாட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதே மே மாதம் 24 தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24 தெற்கு பர்கானாஸ் மாவட்டம் நோடகாலி பகுதியில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் தொடர்கதையாகி வருகிறது.