தெலங்கானாவில் இந்த முறை 2ஜியோ, 4ஜியோ வெற்றி பெறாது. பா.ஜ.க.தான் வெற்றிபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
தெலங்கானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, பா.ஜ.க., காங்கிரஸ், முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் களமிறங்கி இருக்கின்றன. அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் கம்மம் என்கிற இடத்தில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், “தெலங்கானாவில் அசாதுதீன் ஒவைஸி ஆதரவுடன் ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சியை முதல்வர் சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார். இந்த அரசுக்கு கவுன்ட் டவுன் ஆரம்பமாகி விட்டது. தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்து சந்திரசேகர ராவ் வீட்டிற்குச் செல்வார். பா.ஜ.க. தலைமையிலான புதிய ஆட்சி அமையும்.
தெலங்கானாவின் எதிர்காலம் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியால் நிர்மானிக்கப்படும். தனது மகனை முதல்வராக்க சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார். இந்த முறை அவரோ, அவரது மகனோ முதல்வராக முடியாது. தெலங்கானா தனி மாநிலத்துக்குப் போராடி உயிர்நீத்த பலரது கனவுகளை சந்திரசேகர ராவ் கட்சி சிதைத்து விட்டது. ஆகவே, பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக பதவி ஏற்பார்.
அதேபோல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வும், சந்திரசேகர ராவும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜூன கார்கே கூறுகிறார். ஆனால், அப்படி எதுவும் நடக்காது. சந்திரசேகர ராவையும், அசாதுதீன் ஒவைஸியையும் பா.ஜ.க. எதிர்க்கும் என்பதை உறுதியுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
சந்திரசேகர ராவ் கட்சி 2 தலைமுறைகளாகவும் (2ஜி), அசாதுதீன் ஒவைஸி கட்சி 3 தலைமமுறைகளாகவும் (3ஜி), காங்கிரஸ் கட்சி 4 தலைமுறைகளாகவும் (4ஜி) அரசியல் செய்து வருகிறார்கள். இந்தி முறை 2ஜியும், 4ஜியும் வெற்றிபெறாது. பா.ஜ.க.தான் வெற்றிபெறும். பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்தான் முதல்வராகப் பதவியேற்பார்” என்று அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.