ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு தோறும் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை மற்றும் நிறை புத்தரிசி பூஜை, வருடப் பிறப்பு போன்றவற்றிற்கு திறக்கப்படுவது வழக்கம். மேலும், ஒவ்வொரு மாதப் பிறப்பின் போதும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில், கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான திருவோணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் திருவோண பூஜைக்காக தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு மகேஷ் மோகன் முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, சபரிமலை சன்னிதானத்தில் தீபத்திருவிழா முடிந்ததும், ஹோம குண்டத்தின் உச்சியில் உள்ள தீபம் ஏற்றப்பட்டது. இன்று காலை முதல் சிறப்புப் பூஜைகளுக்காக பக்தர்கள் பதிதெனட்டாம் படியேறிச் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஓணம் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஐயப்பன் கோயிலுக்குக் கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.