2030-ம் ஆண்டுக்குள் 13 முதல் 14 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2024-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். இத்திட்டத்திற்கு “ரோஜ்கர் மேளா” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுத்துறைகளில் பணி வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், இரயில்வே தேர்வு வாரியம், அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக “ரோஜ்கர் மேளா” நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 8-வது ரோஜ்கர் மேளா இன்று நாடு முழுவதும் 45 இடங்களில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய மோடி, “நமது இளைஞர்களுக்கு புதிய வழிகளை திறக்கும்வகையில், துணை இராணுவப் படையில் ஆள் சேர்ப்பு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் நாம் ஜன்தன் யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தோம். இது நிதி தொடர்பான நன்மைகள் தவிர, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
2030-ம் ஆண்டுக்குள் சுற்றுலாத்துறை இந்திய பொருளாதாரத்தில் 20 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்கும். இதன் மூலம் 13 முதல் 14 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆட்டோ மொபைல், மருத்துவத்துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. வரும் 10 ஆண்டுகளில் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இந்த வாக்குறுதியை நான் கொடுக்கும்போது, அதற்கான முழுப் பொறுப்பும் எனக்கு உண்டு.
வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு அனைத்து துறைகளின் பங்களிப்பும் முக்கியமாகும். உணவு முதல் மருந்து வரையிலும், விண்வெளியில் இருந்து ஸ்டார் அப்கள் வரையிலும், அனைத்து துறைகளும் பொருளாதாரத்தில் வளர வேண்டியது அவசியமாகும். 13 உள்ளூர் மொழிகளில் தேர்வு நடத்தப்படுவதால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கடந்த 9 ஆண்டுகளில் உட்கட்டமைப்புக்காக 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்திருக்கிறது” என்றார்.