கடந்த 9 ஆண்டுகளில் 50 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் ஜன்தன் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜன்தன் யோஜனா திட்டம்” தொடங்கப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இத்திட்டம், பணப் பரிமாற்றம், கடன் பெறுதல், வைப்புநிதி வைத்தல் என இந்திய நிதி சேமிப்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது .
இத்திட்டத்தின் மூலம் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் முறையாக வங்கிக் கணக்கை தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக, 55.5 சதவிகித வங்கிக் கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 2015-ல் 14.72 கோடியாக இருந்த வங்கிக் கணக்கு, 2023 ஆகஸ்ட் 16-ம் தேதிவரை 50.09 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த வங்கிக் கணக்கு தொடங்கியவர்களில் 67 சதவிகிதம் பேர் கிராமம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கக் கூடியவர்கள். அதேபோல, 2015-ம் ஆண்டு 15,670 கோடி ரூபாயாக இருந்த வைப்புத்தொகை 2023 ஆகஸ்ட் மாதம் 2.03 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. மேலும், 2015 மார்ச் மாதம் 1,065 ஆக இருந்த வைப்புத்தொகை, தற்போது 4,063 ஆக உயர்ந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, சுதந்திரத் தின உரையின்போது, “ஜன்தன் யோஜனா திட்டம்”தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு ஆதார் கார்டு தவிர வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டதால், நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளில் வசிக்கும் மக்களும் பூஜ்ஜியம் பரிவர்த்தனையில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத் தக்கது.