கேரளத்தின் முக்கிய பண்டிகையான ஓணம், நாளை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகைக் கேரளாவில் மட்டுமின்றி, சென்னை, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை உற்சாகமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நாளை செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்டத்திற்கு தமிழகஅரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்குப் பதில் 02.09.2023 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப், பணி நாளாக அறிவிக்கப்படுகின்றது.
ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான 29.08.2023 அன்று அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்டப் பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்குச் சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.