தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், இசைஞானி இளையராஜாவிடம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் நேரில் ஆசி பெற்றார்.
தெலுங்கு மற்றும் தமிழ்த்திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் இசையமைப்பாளர்களில் தேவி ஸ்ரீபிரசாத்தும் ஒருவர்.
அண்மையில், இவர் இசையில் வெளியான புஷ்பா 1 படத்தில் இடம் பெற்ற, “ஓ சொல்லுறியா மாமா” மற்றும் “சாமி, சாமி” உள்ளிட்ட பாடல்கள் செம ஹிட்டானது.
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தின் பட்டித்தொட்டி எங்கும் பரவியது. இளைசுகளைச் சுண்டி இழுத்தது. இந்தப் பாடல்கள் எல்லாமே இணையத்தளங்களில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதோடு,ஒரு பில்லியன் பார்வைகளைக் கடந்து மெகா சாதனை படைத்தது.
இந்த நிலையில், 2021-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், புஷ்பா 1 படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது.
இதனையடுத்து, தேவி ஸ்ரீபிரசாத்துக்குத் திரைப்படப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்தனர். இந்த நிலையில்தான், யாரும் எதிர்பாராத வகையில், ஆந்திராவில் இருந்த தேவி ஸ்ரீபிரசாத், உடனடியாக சென்னைக்கு வந்து, இசைஞானி இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், தேசிய விருது பெறுவதற்கு வழிகாட்டிய இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி என நெஞ்சுருகியுள்ளார்.