ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் உள்ள குளியலறைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பூங்காக்கள் உட்பட பல இடங்களுக்குப பெண்கள் செல்வது தடை செய்யப்பட்டது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்கள் தலைமைப் பதவிகள் வகிக்கத் தடை, உயர்கல்வி படிக்கத் தடை, ஆண் துணை இல்லாவிட்டால் வெளியில் பயணம் செய்வதற்குத் தடை, பொது இடங்களில் உள்ள குளியலறைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பூங்காக்கள் உட்பட பல இடங்களுக்குப பெண்கள் செல்வது தடை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது பாமியன் மாகாணத்தில் உள்ள பிரபலமான பேண்ட்-இ-அமிர் தேசிய பூங்காவுக்குச் செல்வதற்கும் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்குச் செல்லும் பெண்கள் சரியாக ஹிஜாப் அணிவதில்லை என்று ஆப்கானிஸ்தானின் அமைச்சர் முகமது காலித் ஹனாபி குற்றம் சாட்டியுள்ளார்.
சுற்றிப் பார்ப்பது பெண்களுக்கு அவசியமில்லை என்று கூறி, இதற்குத் தீர்வுக் காணாத வரை பெண்கள் அந்த பூங்காவிற்குச் செல்வதைத் தடை செய்யும்படி, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் பேண்ட்-இ-அமிர் பூங்காவிற்குப் பெண்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது