நாட்டில் ஓராண்டுக்குள் 1000 விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று இளைஞர்கள் நலத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.
தேசிய விளையாட்டு தினத்தன்று புதுதில்லியில் பேசிய அவர், முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு இந்த மையத்தில் வேலை வழங்குவதாகவும், இது வெறும் வேலை வாய்ப்புக்காக மட்டும் இல்லாமல் வளரும் விளையாட்டு வீரர்களுக்கு மூத்த வீரர்களின் வழிகாட்டுதலைப் பெறுவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்றும் ஒவ்வொரு வீரரும் தங்கள் மையங்களுக்கான உபகரணங்களை வாங்குவதற்கு ஐந்து லட்சம் ரூபாயும், செயல்பாட்டு செலவிற்காக ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
தேசிய விளையாட்டு தினத்தை நினைவுகூரும் வகையில், 3500 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், நம் நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களைப் பாராட்டிய அவர், கடந்த அறுபது ஆண்டுகளை விட இம்முறை உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. 18 வயதான பிரக்ஞானந்தா உலக கோப்பை செஸ் தொடரில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் அவர், அந்த நிகழ்ச்சியில் ‘பிட் இந்தியா வினாடி வினா’ போட்டியையும், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த தகவல்களையும், கையேட்டையும் அறிவித்தார்.