ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவதும் தோல்வி பெறுவதும் பேட்டிங்கில்தான் இருக்கிறது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாஜ் கூறியுள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் சனிக்கிழமை மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில் இந்தப் போட்டியைக் காண, தான் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பாக ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான போட்டி எதுவென்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டமே. இந்த இரு நாடுகளும் விளையாடும் ஆட்டத்தை நிச்சயமாக நான் பார்ப்பேன்.இந்தியாவுடன் விளையாடும் போதுதான் பாகிஸ்தான் தன்னுடைய திறமையைப் பரிசோதித்துக்கொள்ள முடியும்.
இரு அணிகளையும் ஒப்பிட்டால் இந்தியாவின் பேட்டிங் பலமாக இருக்கிறது. அதேசமயம் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு பலமாக உள்ளது. குறிப்பாக ஷாகின் அப்ரிடி பாகிஸ்தானின் தலைசிறந்த வீரராக உள்ளார்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “இடது கை வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் ஷாகின் ஆப்ரிடி பந்தை ஸ்விங் செய்வது மூலம் அதனை எதிர்கொள்ளும் வலது கை பேட்ஸ்மன்களுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தலாம். இதனால் வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது பந்து ஸ்டெம்பை நோக்கி வருவது போல் ஷாகின் ஆப்ரிடி பந்து வீசினால் அது அவருக்கு விக்கெட்டை பெற்றுக் கொடுக்கும்.
விராட் கோலியின் விக்கெட்டை பாகிஸ்தான் அணி விரைவாக வீழ்த்தினால் இந்த போட்டி பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறிவிடும். ஷாகின் ஆப்ரிடி இந்தியாவில் டாப் 3 வீரர்களுக்கு எதிராக எப்படி செயல்பட போகிறார் என்பதை பொறுத்து இரு அணிகளின் வெற்றியும் தோல்வியும் அமைந்திருக்கிறது” என்று பிராட் ஹாஜ் கூறியுள்ளார்