சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய, தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாநகர் பா.ஜ.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அவரது பேச்சு கடும் சர்ச்சையானது. பா.ஜ.க. உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யவும், அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வலியுறுத்தியும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநரிடம் புகார் மனு அளித்தார். அதேபோல, நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த நிலையில், கோவை பா.ஜ.க. சார்பில், செஞ்சிலுவைச் சங்கம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, அமைச்சர் உதயநிதியின் உருவ படத்தைச் செருப்பால் அடித்தும், காலால் மிதித்தும், கருப்பு வர்ணம் பூசியும் கிழித்தெறிந்தனர். மேலும், சனாதனம் குறித்து அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.