இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை முடக்கும் வகையில், தமிழக அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பாரத் இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் பிரபு, “விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மகிழ்ச்சியோடும், பயபக்தியோடும் கொண்டாடி வருகின்றனர். அப்படிப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, தமிழகத்தில் தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இதனால், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. இது குறித்துச் சொன்னால், உரியவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். அதேசமயம், கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பண்டிகையின்போது, எந்த ஒரு கட்டுப்பாடும் விதிப்பதில்லை. அவர்களுக்கு, முழு சுதந்திரம் கொடுக்கின்றனர். ஆனால், இந்துக்களையும், இந்துக்கள் பண்டிகையையும் மட்டும் முடக்குகின்றனர்.
மேலும், இது ஹிந்துக்களை அவமதிக்கும் செயல், பாரபட்சம் காட்டும் செயலாகவே பார்க்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு தனது போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ளவேண்டும். இல்லையெனில், பெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும். இனி வரும் காலத்தில், இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, பக்தர்கள் நலன் கருதி, கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதைக் கைவிட்டு, சுதந்திரமாகக் கொண்டாட வழி வகை செய்ய வேண்டும்” என்றார்.