ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து, இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்து தீவிரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அனந்த்நாக் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கூட்டு நடவடிக்கை குழு மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வினர் நடத்தி வரும் பரிவர்தன் யாத்திரையில் கலந்துகொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் எந்தவொரு இரு தரப்புப் போட்டிகளிலும் விளையாட மாட்டோம் என்று பி.சி.சி.ஐ. நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தது. எல்லையில் தாக்குதல், ஊடுருவல் சம்பவங்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, அதனுடன் கிரிக்கெட் உறவை தொடங்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது நடைபெற்று வரும் 2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவதாகத்தான் இருந்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தானில் இந்தியா விளையாட வேண்டிய போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2012 – 2013 காலகட்டத்தில் இரு தரப்பு போட்டியில் விளையாடியது. இதன் பிறகு, இரு நாடுகளும் ஐ.சி.சி. போட்டிகளிலும் மற்றும் ஆசியக் கோப்பையில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியது. கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணிற்கே சென்று இந்தியா இரு தரப்பு தொடரில் விளையாடியது. இதுவே இந்தியா முதலும் கடைசியுமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிய போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.