அரசு நிலத்தை ஆக்கிரப்பு செய்த திமுக எம்பி கலாநிதி வீராசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அந்த இடத்தை உடனடியாகவோ அல்லது ஒரு மாதத்திலோ காலி செய்ய வேண்டும் என கெடு விதித்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசமியின் மகனும், வடசென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் கலாநிதி வீராசாமி. இவர், சென்னை கோயம்பேடு அருகே மெட்ரோ ரயில் நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அங்கு, மருத்துவமனை கட்டி, சம்பாதித்து வருகிறார்.
இந்த நிலையில், கலாநிதி வீராசாமி ஆக்கிரமிப்பு செய்த இடத்தை காலி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுக்கு மனு செய்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும் உள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 1995 -ம் ஆண்டு, வேறு ஒரு நபரிடம் இருந்து நிலம் வாங்கப்பட்டதாகவும், இந்த நிலம், கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், எனவே, இதன் மீது அரசு உரிமை கோர முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
ஆனால், கலாநிதி வீராசாமியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, கிராம நத்தம் என்பது பொதுவான கிராம நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலம். வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் நிலத்தை தனியார் நடத்தும் மருத்துவமனை வணிக பயன்பாட்டுக்கு எப்படி பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியவர்,
சமூகநீதி பாதுகாவலர்கள் எனக்கூறும் அரசியல் கட்சியினர் மக்கள் விருப்பத்தையும், சட்டத்தையும் மதித்து நடக்க வேண்டும் என்றும், எனவே, உடனடியாக ஆக்கிரமிப்பு நிலத்தை காலி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், கலாநிதி வீராசாமி மற்றும் திமுகவினர் கலங்கிப்போய் உள்ளனர்.