ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியதும் தேசியகீதம் இசைக்கப்பட்டது. பிறகு, அவை நடவடிக்கைகள் துவங்கின. அப்போது, மக்களவையில் வழக்கம்போல எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. உடனே, உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு வலியுறுத்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தனது உரையைத் தொடங்கினார். அப்போது, “இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்குமான இணைப்புப் பாலமாக இந்தியா விளங்குகிறது.
ஜி20 மாநாட்டை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தியதற்காக ஒவ்வொரு இந்தியரையும் பாராட்ட விரும்புகிறேன். இம்மாநாட்டை நாட்டு மக்களுக்கு அர்பணிக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கும் பாராட்டுகள். ஜி20 மாநாடு மூலம் இந்தியாவின் புகழ் உலக அரங்கில் மேலும் உயர்ந்திருக்கிறது. மாற்றத்திற்கான முக்கிய முடிவுகள் ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்டன. ஜி20 மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதகாப்பு, காலநிலை மாற்றம் குறித்து முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம். உலகளவில் அமைநியை நிலைநாட்டுவதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் மோடி, மக்களைவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார். அதேபோல, மாநிலங்களவையிலும் அவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர், ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்தார்.