உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மிக அதிகம். கிரிக்கெட்டை விரும்புகிறவர்கள் என்று சொல்வதை விட வெறியர்கள் என்றே சொல்லி விடலாம்.
இப்படி ரசிகர்களின் அளப்பரிய அன்பை பெற்றுள்ள கிரிக்கெட்டில் ஒரு சில சாதனைகள் பல நூற்றாண்டுகள் நினைவு கூறப்படும். அப்படி ஒரு சாதனையைதான் ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
1983-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு உலககோப்பையை அதுவும், முதல் டி-20 உலக கோப்பையை இந்தியா வெற்றி பெற்றதை என்றென்றும் வரலாறு பேசும். இது ஒரு பக்கம் இருக்க, தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதே நாளில் உலகம் பேசும் ஒரு சாதனை தான் நடந்து.
2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் 21-வது ஆட்டம். டாஸ் வென்ற கேப்டன் தோனி இந்தியா பேட்டிங் செய்யும் என்று அறிவிக்கிறார். இந்தியாவுக்கு தொடக்கமே அமோகமாக இருக்க, இங்கிலாந்து பவுலர்களை புரட்டியெடுத்த தொடக்க ஜோடிகள் சேவாக்(68), கவுதம் காம்பீர்(58) ரன்கள் முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த ராபின் உத்தப்பா, கேப்டன் தோனி விரைவில் ஆட்டமிழக்க மறு புறம் கம்பீரமாக களத்தில் ஆடிக் கொண்டிருந்தார் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங். இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்தே வெறித்தனமாக ஆடிக் கொண்டிருந்த யுவராஜ் இந்த ஆட்டத்திலும் தொடக்கம் முதலே அடித்து ஆடினார்
18 ஓவர்களில் இந்தியா 171 ரன்கள் சேர்த்து ஆடிக் கொண்டிருந்தது. யுவராஜ் 20 ரன்களை கடந்து களத்தில் நிற்கிறார். ஏற்கனவே இந்தியாவின் ரன் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்க, ரன்னை கட்டுப்படுத்தும் பொருட்டு, இளம் வேகப்பந்து புயல் ஸ்டூவர்ட் பிராட்டிடம் நம்பிக்கையுடன் பந்தை ஒப்படைத்தார் இங்கிலாந்து கேப்டன் பால் கோலிங்வுட்.
ஸ்டூவர்ட் பிராட் வீசிய முதல் பந்தே புல்லர் லென்த்தாக விழ, அதை அப்படியே லெக் சைடுக்கு தூக்கி சிறப்பான வரவேற்பு கொடுத்தார் யுவராஜ் சிங். 2-வது பந்து, 3-வது பந்து என்று அடுத்தடுத்து மணிக்கு 120 கி.மீ வேகத்துக்கு மேல் வீசப்பட்ட பந்துகளையும் அசால்டாக இரசிகர்கள் பக்கம் பறக்க விட்டு யுவராஜ் பிரமிப்பூட்டினார். இங்கிலாந்து கேப்டன் பால் கோலிங்வுட் முகத்தில் ஈயாடவில்லை. பவுலர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதே வேளையில் போட்டியை நேரடியாக பார்த்த இரசிகர்களும், தொலைக்காட்சியில் பார்த்த இரசிகர்களும் உற்சாகத்தில் மிதந்தனர்
நம்பிக்கையின்றி வீசிய 4-வது, 5-வது, 6-வது பந்துகளையும் லெக் சைட், ஆப் சைட் என்று சர்வ சாதாரணமாக சிக்சருக்கு தூக்கி உலக சாதனை படைத்தார் யுவராஜ் சிங். யார்க்கர் போட வேண்டும் என்று நினைத்து மீண்டும், மீண்டும் புல்லர் லென்த், புல்டாஸ் என்று ஸ்டூவர்ட் பிராட் தவறிழைக்க, அந்த பந்துகள் அனைத்தையும் வெறித்தனமாக வேட்டையாடினர் யுவராஜ் சிங். வீசிய 6 பந்துகளும் சிக்சருக்கு சென்றதால் உடைந்து கண்ணீர் விட்டார் பவுலர் ஸ்டூவர்ட் பிராட்.
இந்த சாதனையின் நாயகன் யுவராஜ் சிங், அந்த ஆட்டத்தையும் வென்று கொடுத்து, உலக கோப்பையையும் இந்தியா பெற முக்கிய காரணமாக விளங்கினார். இந்த வெறித்தனமான ஆட்டத்துக்கு பிறகு தனக்கு பலநாள் தூக்கமே வரவில்லை என்று பவுலர் ஸ்டூவர்ட் பிராட் புலம்பி தள்ளினார். அந்த நாள்கள் மட்டுமில்ல, யுவராஜ் சிங்கை எப்போது நேரில் பார்த்தாலும் அல்லது போட்டோவில் பார்த்தாலும் கூட அன்றைய தினம் ஸ்டூவர்ட் பிராட்டின் துக்கம் தொலைந்திருக்கும் என்பதே உண்மை.