இலங்கை அரசின் அழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவண ராஜா அந்நாட்டைவிட்டு வெளியேறி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ரீ.சரவண ராஜா. இவர் குருந்தூர்மழை தொடர்பான வழக்கில் முக்கியக் கட்டளைகளை பிறப்பித்து தீர்ப்பளித்திருந்தார். ஆனால், நீதிபதி வழக்கிய கட்டளைகளை மாற்றி அமைக்குமாறு அரசுத் தரப்பில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் இருந்தும் தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இதையடுத்து, தான் வகித்து வந்த நீதிபதி பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளையும் துறந்துவிட்டு, அந்நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் நீதிபதி ரீ.சரவண ராஜா.
இது தொடர்பாக நீதிபதி சரவண ராஜா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “குருந்தூர்மலை வழக்கில் நான் வழங்கிய கட்டளைகளை மாற்றி அமைக்குமாறு அரசுத் தரப்பால் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உட்பட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தனர்.
மேலும், எனக்கான காவல்துறை பாதுகாப்பும் அண்மையில் குறைக்கப்பட்டது. அதோடு, உளவுப் பிரிவினரும், புலனாய்வாளர்களும் என்னை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர். இலங்கை அதிபரோ, கடந்த 21-ம் தேதி என்னை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றி அமைக்கும்படி அழுத்தம் கொடுத்தார். குருந்தூர்மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில், எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு 2 வழக்குகள் தொடரப்பட்டன.
ஆகவே, எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதி பதவிகள் உட்பட அனைத்தையும் துறந்து விட்டேன். இதுகுறித்த எனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 23-ம் தேதியன்று பதிவுத் தபால் மூலம் நீதிச்சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும், அவரது பதவி விலகல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இலங்கை நாட்டை விட்டு வெளியேறி விட்டது தெரியவந்திருக்கிறது.