டெல்லி புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதற்காக, 749 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமம் வழங்கப்பட்டது. இந்த புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், அம்மாநில துணை நிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனாவிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். இதையடுத்து, புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
பின்னர், இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து, புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணை செய்ததோடு, கடந்த பிப்ரவரி மாதம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது வரை அவர் சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர்.சி.பி. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மகுண்டா சீனிவாசலு ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டா, மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளரும், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபருமான தினேஷ் அரோரா ஆகியோர் நேற்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.