ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா கூட்டாண்மை வலுப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அபுதாபி சேம்பர் ஏற்பாடு செய்திருந்த இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயர்நிலை வணிகத் தலைவர்களுடனான கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிகரித்து வரும் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவது இரு தரப்பு வணிகங்களுக்கும் விரைவான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்றார்.
இந்தக் கூட்டாண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்சின் முக்கியப் பங்கினை கோயல் வலியுறுத்தினார். இது இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இலக்கு என்றும், மூன்றாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி மற்றும் அந்நிய நேரடி முதலீட்டின் அடிப்படையில் மிகப்பெரிய முதலீட்டாளர் என்று குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒத்துழைப்பிற்கு வலுவான அடித்தளத்தை இது உருவாக்குகிறது என்று கூறினார். இரு நாடுகளும் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்கின்றன, இது தற்போதைய திறன்கள் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளுடன் இணைந்துள்ளது, இது இந்தக் கூட்டாண்மை செழிக்க உத்வேகம் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
140 கோடி மக்களைக் கொண்ட இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள வணிகங்களுக்கு ஒரு பெரிய சந்தையாக குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது என்று குறிப்பிட்டார். அடுத்த 30 ஆண்டுகளில் இந்திய மக்களின் சராசரி வயது 30-க்கும் குறைவாக இருக்கும் என்றும், 2047-க்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 டிரில்லியன் டாலரைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் லட்சிய இலக்கு பற்றி எடுத்துரைத்தார். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கான பொற்காலம் என்று குறிப்பிட்டார்.