தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்றும், அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
அதன்படி, மிசோராம் மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதியும், சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 என 2 கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
இத்தேர்தலை முன்னிட்டு, மேற்கண்ட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. அறிவித்து வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 136 இடங்களுக்கும், சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 85 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது.
மேலும், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு வெறும் 41 கொண்ட பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல, மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 21 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. அதேசமயம், தெலங்கானா மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதையடுத்து, மேற்கண்ட 5 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக, பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தலைநகர் டெல்லியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. இரவு 7 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்கிறார்.
பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும், தேர்தல் குழுவின் உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யவிருக்கிறார்கள்.