தொடர் விடுமுறையையொட்டி, இன்றும், நாளையும் கூடுதலாக மெட்ரோ இரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வருகிறது. வார விடுமுறையைத் தொடர்ந்து திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமை என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து பலர் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வர்.
இதன் காரணமாக, தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்களும், தமிழகப் போக்குவரத்துத் துறை சார்பில், சிறப்புப் பேருந்துகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பயணிகள் வசதிக்காக, மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆயுத பூஜை தினமான திங்கட்கிழமை மற்றும் சரஸ்வதி பூஜை தினமான செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிக்காக, கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, இன்றும், நாளையும் இரவு 10.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் நீட்டிக்கப்பட்ட நேரங்களில், இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்குப் பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மேலும், இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை இரண்டு நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.