சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 4-வது மற்றும் இறுதிப் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி, அக்கட்சியின் தலைவர் ராஜேஷ் அகர்வால், மாநிலத்தின் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோவை எதிர்த்து அம்பிகாபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிகாலம் நிறைவடையப் போவதை முன்னிட்டு, மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17-ம் தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
மேலும், முதல்கட்டமாக பதற்றம் மிகுந்த 20 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இதையடுத்து, இரு கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டிருக்கிறது. முதல்கட்டமாக 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க., தொடர்ந்து 64 மற்றும் ஒருவர் அடங்கிய 2 மற்றும் 3-வது பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில், பா.ஜ.க. இன்று இறுதிப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலில் அக்கட்சியின் தலைவர் ராஜேஷ் அகர்வால், அம்பிகாபூர் தொகுதியில் துணை முதல்வர் சிங் தியோவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். சுஷாந்த் சுக்லா பெல்டாராவிலும், கஸ்டோலில் தானிராம் திவார் மற்றும் பெமேதராவில் திபேஷ் சாஹு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல, பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் 40 நட்சத்திரப் பிரச்சாரகர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சி கடந்தவாரம் வெளியிட்டது.