மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள ஸ்ரீசாய்பாபா சமாதி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை ஷீரடியில் உள்ள ஸ்ரீசாய்பாபா கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவிலில் புதிய தரிசன வரிசை வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய தரிசன வரிசை வளாகம், பக்தர்களுக்கு வசதியான காத்திருப்புப் பகுதிகளை வழங்கும் வகையில் நவீன முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமரும் வசதியுடன் கூடிய பல காத்திருப்பு அரங்குகள் உள்ளன. மேலும், இங்கு பக்தர்களின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட ஆடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள், முன்பதிவு மற்றும் பிரசாத கவுன்ட்டர்கள், தகவல் மையம் போன்ற வசதிகள் உள்ளன. இந்த புதிய தரிசன வரிசை வளாகத்தின் அடிக்கல்லை பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின்போது, நில்வண்டே அணையின் ‘ஜல் பூஜை’ மற்றும் அணையின் கால்வாய் வலையமைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, ’நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா’ திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், மகாராஷ்டிராவில் உள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 86 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் கூடுதல் தொகை கிடைக்கும்.
மேலும், அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் ஆயுஷ் மருத்துவமனை உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது தவிர, குர்துவாடி-லத்தூர் சாலை இரயில் பிரிவு மின்மயமாக்கல், ஜல்கானை புசாவலுடன் இணைக்கும் 3-வது மற்றும் 4-வது இரயில் பாதை, தேசிய நெடுஞ்சாலை 166-ன் (தொகுப்பு-I) சாங்க்லி முதல் போர்கான் வரையிலான 4 வழிச்சாலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் மன்மட் டெர்மினலில் கூடுதல் வசதிகள், அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு ஆகிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.