கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு மாநில அரசுக்கு உதவுவதற்காக, என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகளை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார்.
கேரள மாநிலம் கொச்சியின் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில், யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு கடந்த 27-ம் தேதி தொடங்கி 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று காலையில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது, தீடீரென ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடித்தது. தொடர்ந்து, மேலும் 2 இடங்களில் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துப் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர். டி.ஜி.பி. சம்பவ இடத்துக்கு விரைகிறார். நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். டி.ஜி.பி.யிடம் பேசினேன். விசாரணைக்குப் பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும்” என்றார்.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குண்டுவெடிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது, இச்சம்பவம் குறித்த மாநில அரசின் விசாரணைக்கு உதவும் வகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளையும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த தேசிய பாதுகாப்பு கமாண்டோ படையினரையும் அனுப்பி வைப்பதாக அமித்ஷா தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ. மற்றும் என்.எஸ்.ஜி. அதிகாரிகள் கேரளாவுக்கு விரைந்திருக்கிறார்கள்.