காங்கிரஸ் கட்சியிடம் தொலைநோக்குப் பார்வையோ, வளர்ச்சிக்கான திட்டமோ இல்லை என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் 17-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆகவே, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸும் பகீரத முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. அதோடு, தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதால் இரு கட்சிகளின் தலைவர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அதேசமயம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருக்கிறார். இதனால், பிரதமரால் நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. எனவே, தனது எக்ஸ் சமூக வலைத்தளம் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இந்த முறை மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், பொதுமக்களிடம் ஆசிர்வாதம் பெறும் பிரசாரமாக மிகவும் சிறப்பாக இருந்தது. மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று பலரையும் சந்தித்து உரையாடினேன்.
பா.ஜ.க. மீது மக்கள் கொண்டுள்ள பாசம், வைத்திருக்கும் நம்பிக்கை, எங்களின் மிகப்பெரிய சொத்து. மத்தியப் பிரதேசத்தின் பெண் சக்தி இந்தத் தேர்தலில் களமிறங்கி பா.ஜ.க. கொடியை உயர்த்தி வருகிறது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது எப்படி பா.ஜ.க.வின் முன்னுரிமையாக இருக்கிறதோ, அதேபோல பா.ஜ.க. அரசு மீண்டும் வருவதையும் பெண்கள் முன்னுரிமையாகக் கொண்டுள்ளனர்.
இன்றைய புதிய தலைமுறை இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளையும் தங்கள் சொந்த 25 ஆண்டுகளையும் ஒன்றாகப் பார்க்கிறது. அதனால்தான் வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்றும் பொறுப்பை நிறைவேற்ற நமது இளைஞர்களும் தோளோடு தோள் நின்று வருகிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தை 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்த மத்தியப் பிரதேசமாக மாற்ற பா.ஜ.க.வால் மட்டுமே முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இரட்டை இன்ஜின் அரசாங்கத்தின் பலன்களை மத்தியப் பிரதேச மக்கள் பார்க்கிறார்கள். மேலும், மாநிலத்தின் தேவையையும் புரிந்துகொள்கிறார்கள்.
பேரணிகளின்போது, காங்கிரஸின் வம்ச அரசியல் மற்றும் எதிர்மறைத் தன்மையால், மத்தியப் பிரதேச மக்கள் எவ்வளவு கோபமாக உள்ளனர் என்பதையும் நான் கண்டேன். காங்கிரஸுக்கு தொலைநோக்கு பார்வையோ, மத்தியப் பிரதேச மாநில வளர்ச்சிக்கான பாதையோ இல்லை. வளர்ந்த மத்தியப் பிரதேசத்துக்கும், வளர்ந்த இந்தியாவுக்கும் பா.ஜ.க.வை தேர்வு செய்ய வேண்டும் என்று வாக்காளர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.