பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள், காங்கிரஸ் கட்சியின் வெற்று வாக்குறுதிகளை அல்ல என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பதால் நேரடித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. எனவே, தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டிருக்கும் பதிவில் பா.ஜ.க.வுன் நல்லாட்சியை மக்கள் நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இம்முறை சத்தீஸ்கர் தேர்தல் பிரசாரத்தின்போது, எனது அனுபவங்கள் ஆச்சரியமானவையாக இருந்தன. சத்தீஸ்கரின் கடின உழைப்பாளி மக்கள் தங்கள் மாநிலத்தை சிறப்பாகவும், சிறந்ததாகவும் மாற்றுவதற்கான புதிய நம்பிக்கைகள் மற்றும் புதிய ஆற்றலுடன் நிரம்பி இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழலின் பிடியில் இருந்து சத்தீஸ்கரை யாரால் விடுவிக்க முடியும் என்றால், அது நிச்சயமாக பா.ஜ.க.வால் மட்டுமே முடியும் என்பது சத்தீஸ்கர் மக்களுக்குத் தெரியும். பா.ஜ.க.தான் சாதித்தது, பா.ஜ.க.தான் மாநிலத்தை மேம்படுத்தும்.
அடுத்த சில ஆண்டுகளில் சத்தீஸ்கர் தனது 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இன்று முதல்முறையாக வாக்களிக்கப் போகும் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள், வளமான சத்தீஸ்கர் கனவுகளுடன் இருந்து வருகின்றனர். அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியா என்ற உறுதிமொழியுடன், வளர்ந்த சத்தீஸ்கரின் உறுதிமொழியையும் அவர்கள் எடுத்திருக்கிறார்கள்.
அவர்கள் தங்களது வாழ்நாளின் அடுத்த 25 ஆண்டுகளை வளர்ந்த சத்தீஸ்கர், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக அர்ப்பணிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் நமது வளர்ச்சி மாதிரியுடன் இணைந்திருக்கும் விதம் மிகவும் ஊக்கமளிக்கிறது.
சத்தீஸ்கர் இளைஞர்களின் இந்த சக்தி, மாற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதப் போகிறது. சத்தீஸ்கரின் மஹ்தாரி, நமது சகோதரிகள் மற்றும் மகள்களும் மாநிலத்தின் வளர்ச்சிக் கொடியை உயர்த்தி இருக்கிறார்கள். இன்று, இந்திய பெண்கள் அதிகாரம் பெற முயற்சிக்கும் விதத்தின் தாக்கத்தை சத்தீஸ்கரிலும் காணலாம்.
இத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்பது உறுதி. பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்களே தவிர, காங்கிரஸின் வெற்று வாக்குறுதிகளை அல்ல. பா.ஜ.க. தனது ஒவ்வொரு தீர்மானத்தையும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் வரவிருக்கும் பா.ஜ.க. அரசு, உங்கள் அபிலாஷைகள் மற்றும் மாநிலத்தின் செழிப்புக்கான அரசாக இருக்கும் என்று நான் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
छत्तीसगढ़ में इस बार चुनाव अभियान के दौरान मेरे अनुभव बहुत ही अद्भुत रहे, अभूतपूर्व रहे। कहा जाता है- छत्तीसगढ़िया…सबसे बढ़िया। मैंने इसकी प्रतिध्वनि चारों तरफ महसूस की। छत्तीसगढ़ के परिश्रमी लोग अपने राज्य को और बेहतर बनाने के लिए, सर्वश्रेष्ठ बनाने के लिए नई उम्मीदों और नई…
— Narendra Modi (@narendramodi) November 15, 2023