ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, கடந்த 7-ம் தேதி 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்துக்கும், கடந்த 17-ம் தேதி 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. மேலும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் நிறைந்த 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதியும், மிதமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 17-ம் தேதியும் என 2 கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
இதையடுத்து, மீதமுள்ள 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு நாளையும் (25-ம் தேதி), 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநிலத்துக்கு 30-ம் தேதியும் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. எனவே, மேற்கண்ட 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்துக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில், கரண்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மிந்த் சிங் கூனார் உயிரிழந்து விட்டதால், மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இம்மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட், கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இதையொட்டி, மாநிலத்தில் மொத்தம் 51,756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தேர்தலில் 183 பெண்கள் உட்பட 1,875 பேர் போட்டியிடுகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.