சுமார் 81 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கும் பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் (PMGKAY) மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கின் போது பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது. அதோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கூடுதலாக ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் பலமுறை நீட்டிப்பிற்குப்பின் முடிவடைந்தது. அதன்பின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த திட்டம் வருகிற டிசம்பர் 31- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.