சென்னையில் புயல், பெருமழை, வெள்ளத்தில் சிக்கி திண்டாடிய மக்கள் மனதில் இருந்து வடு நீங்காத நிலையில், திமுக அரசின் சுகாதாரத்துறையில் ஜீரணிக்கவே முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்துள்ளது ஒரு குழந்தை. அந்த குழந்தையின் உடலை, Shroud எனச் சொல்லக்கூடிய துணியில் சுத்தி கொடுக்காமல், வெறுமனே அட்டை டப்பாவில் வைத்து, பெற்றோரிடம் பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் வழங்கியுள்ளார். மனித நேயமற்ற இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து அந்த குழந்தையின் உடலை எடுத்துச் சென்ற குழந்தையின் பெற்றோர் இரத்தக் கண்ணீர் வடித்துள்ளனர்.ஒரு பக்கம் குழந்தையின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மறு பக்கம், இறந்துபோன குழந்தையை முறைப்படி வழங்காமல்…தமிழக மருத்துவத்துறை ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளனர்.
இதை நினைத்து நினைத்து தாங்க முடியாத துக்கத்தை வெளியே சொல்ல முடியாமல், குழந்தையின் பெற்றோர், இடுகாட்டில் கண்ணீர் மல்க குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தெய்வமே இது தகுமா? என இடிந்துபோய் உட்கார்ந்த போது, அவர்களைத் தேற்ற யாராலும் முடியவில்லை.
இந்நிலையில், திமுக அரசின் தரம் கெட்ட இந்த செயலை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாரத்தான்களை நடத்துவதிலும், முதலமைச்சரின் தவறுகளைப் பாதுகாப்பதிலும் மும்முரமாக உள்ளார். நாட்டில் ஒரு காலத்தில் தேடப்பட்டு வந்த மருத்துவக் கட்டமைப்பு இன்று ஊழலில் திளைக்கும் திமுக அரசின் கீழ் அடிமட்டத்தை எட்டியுள்ளது, விரைவில் திரும்பப் பெற முடியாத நிலையை அடையும் அபாயம் உள்ளது.
வலியால் துடித்த பெண்ணைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை, அவரது குழந்தையின் சடலம் அட்டைப்பெட்டியில் சென்னை அரசு மருத்துவமனையால் வழங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளை நம்பி உள்ள மக்கள் படும் இன்னல்களுக்கு இழப்பீடு அறிவிப்போ, பெயரளவுக்கு இடைநீக்கம் செய்வதோ தீர்வாகாது என்பதையும், மருத்துவ வசதிகளை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையும் திமுக அரசு உணர வேண்டிய தருணம் இது என குட்டு வைத்துள்ளார்.
என்ன செய்யப்போகிறது திமுக அரசு?