வாரணாசி – டெல்லி இடையே, இரண்டாவது வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை, வரும் 17-ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு வாரணாசியில் இருந்து முதல் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லி – வாரணாசி இடையே இரண்டாவது வந்தே பாரத் விரைவு இரயிலை இந்திய இரயில்வே தொடங்க உள்ளது.
வரும் 17-ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவை தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாக செல்ல உள்ளார். அப்போது, காசியில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வந்தே பாரத் விரைவு இரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன வசதிகளுடன் கூடிய இந்த வந்தே பாரத் இரயிலில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் அமைப்பு, சிசிடிவி கேமராக்கள், பயோ டாய்லெட், தானியங்கி கதவு உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. மேலும், புதிய அம்சங்களுடன், இரயிலில் கவாச் அமைப்பும் உள்ளது.
புதிய வந்தே பாரத் இரயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு மாலை 3 மணிக்கு புறப்படும். மறுமுனையில், வாரணாசியில் இருந்து காலை 6 மணிக்கு டெல்லிக்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய வந்தே பாரத் இரயில் (வண்டி எண் – 22436) புது டெல்லியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு கான்பூர், பிரயாக்ராஜ் வழியாக மதியம் 2 மணிக்கு வாரணாசியை சென்றடைகிறது.
இந்த இரயில் மறுமுனையில் வாரணாசியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு, பிரயாக்ராஜ், கான்பூர் வழியாக இரவு 11 மணிக்கு டெல்லியை சென்றடைகிறது.
இந்த இரயில் ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் இயங்குகிறது. மேலும், எட்டு மணி நேரத்திற்குள் மொத்தம் 769 கிலோ மீட்டர் பயணிக்கிறது. சராசரியாக மணிக்கு 96 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.