மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ராகுல் காந்தி, அப்போது பா.ஜ.க. தலைவராக இருந்த அமித்ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் விஜய் மிஸ்ரா, அதே ஆண்டு அம்மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இன்று ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ராகுல் காந்தி இன்று ஆஜராகவில்லை. இந்த சூழலில், இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், வரும் ஜனவரி 6-ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருக்கிறது.