பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் தானாபூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். 32 வயதான இவர், அங்குள்ள சிவன் கோவிலில் பூசாரியாக இருந்தார். இவரது சகோதரர் அசோக்குமார், அப்பகுதியின் முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி.
இந்த சூழலில், கடந்த 12-ம் தேதி முதல் பூசாரி மனோஜ்குமாரை காணவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காணாமல் போன மனோஜ்குமாரை தேடிவந்தனர்.
இந்த நிலையில், பூசாரி மனோஜ்குமாரின் உடல், அப்பகுதியிலுள்ள முட்புதருக்குள் கிடப்பதாக நேற்று இரவு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, விரைந்து சென்ற போலீஸார், மனோஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, மனோஜ்குமார் மாயமானது குறித்து போலீஸில் புகார் அளித்தும், கடந்த 5 நாட்களாக போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, அவரது உறவினர்களும், கிராம மக்களும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.
மேலும், போராட்டத்தின்போது போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். போலீஸ் வாகனத்துக்கும் தீவைத்தனர். இதில், 2 போலீஸார் படுகாயமடைந்தனர். பின்னர், தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து கோபால்கஞ்ச் சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி பிரஞ்சல் கூறுகையில், “கிராமத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க போதுமான போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.