தென் மாவட்டங்களில் கனமழை பெய்த போது முதல்வர் ஸ்டாலின் இண்டி கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போழ மழை, வெள்ளத்தால் 31 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களின் குடுபத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறினார்.
திருநெல்வேலி,தூத்துக்குடி,தென்காசி மாவட்டங்களில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக 18ஆம் தேதி செய்தி கிடைத்ததாகவும், உடனடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையை அனுப்புமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து ,தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படை மற்றும் ஹெலிகாப்டர், படகு உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். விமானப்படை, கடற்படையினரும். மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வந்ததாகவும், மீட்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.வெள்ளத்தில் தவித்த 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று டிசம்பர் 12ஆம் தேதி முதல் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மழை பாதித்த அன்றும், 3 மணி நேரத்துக்கு ஒரு முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுத்த பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்தது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
வெள்ளம் பாதித்த இடங்களுக்கு தமிழக அமைச்சர்களும் அதிகாரிகளும் தாமதமாகவே சென்றனர். தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது. மாநில அரசு என்ன செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக செலவு செய்த ரூ.4,000 கோடி எங்கே போனது? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை ஆய்வு மையம் மீது குறைகூறுவது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக 900 கோடி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெள்ள நிவாரணத்தொகை ரூ.6 ஆயிரம் ரூபாயை வங்கிகளில் செலுத்தாமல் நேரடியாக கொடுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மழை பாதிப்பின்போது முதல்வர் ஸ்டாலின் டில்லியில் இண்டி கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். தமிழக முதல்வர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது இதன்மூலம் தெளிவாக தெரியும். தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட பிரதமர் மோடி, இரவு நேரத்தில் கூட முதலமைச்சரை ஸ்டாலினை சந்திக்க நேரம் ஒதுக்கியதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2015 வெள்ளத்தின் போது நான் அம்பத்தூரில் ஆய்வு செய்தேன். 2015ல் வெள்ளத்தில் பாடம் கற்றிருந்தால், தற்போது அம்பத்தூரில் வெள்ளநீர் தேங்கி இருக்காது. அந்த வெள்ளத்தில் தமிழக அரசு கற்றுக்கொண்டது என்ன? தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை என்றும், தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்ததே இல்லை என்றும், இனி அறிவிக்கவும் முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இது உன் அப்பன்வீட்டு காசா என முதல்வரின் குடும்பத்தை சேர்ந்த அமைச்சர் உதயநிதி பேசுகிறார். அவர் இருக்கும் பதவி உட்பட எல்லாம் அவரது அப்பா வீட்டு காசா என கேட்க முடியுமா? இது என்ன மாதிரியான பாஷை? இந்த மாதிரியான பேச்சுகள் அரசியலில் நல்லதல்ல. பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். நாக்கில் பதவிக்கு ஏற்ற அளவிற்கு வார்த்தைகள் அளந்து வர வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.