அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும், ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்திலிருந்து மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மரக் கதவுகள் வந்து சேர்ந்ததாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
ஸ்ரீராம ஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, அயோத்தியில் ஸ்ரீராமா் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், 1,600 சிற்பக் கலைஞர்கள் மூலம் 1,800 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்ரீராமர் கோவில் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இக்கோவிலுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350-க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவிக்கு கருவறைகள் அமைக்கப்படுகின்றன. வரும் ஜனவரி 22-ம் தேதி இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த உத்தரப் பிரதேச அரசு தயாராகி வருகிறது.
இந்த நிலையில், கோவிலின் நுழைவு வாயில், முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவி கருவறைகள், லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு 44 தேக்கு மரக்கதவுகளை சென்னையை அடுத்த மாமல்லபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரியில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் படித்த கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதி மர சிற்பக் கலைஞர் ரமேஷ் தலைமையில், மாமல்லபுரம் மரச்சிற்ப கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக இப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில், 2 யானைகள் துதிக்கையை தூக்கி வரவேற்பது போலவும், கழுகுகள் பறப்பது போலும் பல்வேறு வடிவமைப்புகளுடன் கதவுகள் வடிமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பணிகள் குறித்து அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், “அயோத்தியில் அமையும் இராமர் கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு கட்டுமானப் பொருள்கள் வந்து சேர்ந்துள்ளன.
அதன்படி, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோவிலுக்குத் தேவையான மணிகள் சென்றடைந்தன. அதேபோல, தங்கப் பட்டை வேயப்பட்ட மரக் கதவுகள் ஐதராபாத்திலிருந்து வந்திருக்கிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக கதவுகளை தயாரித்து வரும் தனியார் நிறுவனம், கோவிலின் அனைத்து சன்னதிகளையும் மூடுவதற்கு 118 மரக்கதவுகளை தயாரித்து வருகிறது.
இன்னும் ஏராளமான கதவுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. 9 அடி உயரமுள்ள 18 கதவுகள் தயாராகி விட்டன. அவை ஜனவரி 1-ம் தேதி கோவிலில் பொருத்தப்படும்” என்றார்.