வரும் 2032-ம் ஆண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். வரும் 2080-ம் ஆண்டுக்கு பிறகு, உலகில் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா மாறும் என்று சி.இ.பி.ஆர். எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்திருக்கிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சி.இ.பி.ஆர். எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பொருளாதார ஆலோசனைகள் வழங்கும் சேவையிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், சி.இ.பி.ஆர். நிறுவனம் உலக பொருளாதார லீக் அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. அதில், “வரும் 2032-ம் ஆண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.
மேலும், மக்கள்தொகை மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின்படி, 2080-ம் ஆண்டுக்குப் பிறகு சீனா மற்றும் அமெரிக்காவை முந்தி, உலகில் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாகவும் இந்தியா மாறும். அப்போது, இந்தியாவின் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சீனாவை விட 90 சதவீதம் அதிகமாகவும், அமெரிக்காவை விட 30 சதவீதம் அதிகமாகவும் இருக்கும்.
இந்தியாவில் 2024 முதல் 2028-ம் ஆண்டு வரை சராசரியாக 6.5 சதவீத அளவில் நிலையான வலுவான வளர்ச்சி இருக்கும். இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கான முக்கிய உந்து சக்திகளாக அந்நாட்டின் இளைஞர்கள், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர், ஆற்றல்மிக்க தொழில் முனைவோர்கள் மற்றும் உலக பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பு போன்றவை உள்ளன.
எனினும், வறுமை ஒழிப்பு, சமத்துவமின்மை, மனித மூலதன மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் இந்தியா முன்னோடியாகத் திகழ தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியம். இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள அரசு, தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இதுபோன்ற சவால்கள் இருந்த போதிலும், நடப்பு 2022 – 2023-ம்ம் நிதியாண்டில் 7.2 சதவீத வளர்ச்சியை இந்தியா பதிவு செய்திருக்கிறது. வரும் 2023 – 2024-ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதம் என்ற அளவில் மிதமான வளர்ச்சியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.