பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2, 3-ம் தேதிகளில் திருச்சி, கேரளா, லட்சத்தீவு என இரு நாட்களுக்கு தொடர்ச்சியாக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
திருச்சி விமான நிலையத்தில் 1,112 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான் இந்த புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறார்.
அதேபோல, திருச்சி பாரதிதாசன் பல்கலைகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவும் நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.
ஆகவே, இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, நாளை காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து பிரதமர் மோடி புறப்படுகிறார். காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் பிரதமர் மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து நேராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். அங்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
பின்னர், அங்கிருந்து கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, அங்கு புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் விமான நிலையத்தின் புதிய முனையத்தை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் விமான நிலையத்தின் புதிய முனையம், திருச்சி என்.ஐ.டி.யில் கட்டப்பட்டிருக்கும் புதிய விடுதி மற்றும் பல்வேறு இரயில் திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும், விமானம், இரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் போக்குவரத்து மற்றும் உயர்கல்வித் துறைகள் தொடர்பான 19,850 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
திருச்சி பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி லட்சத்தீவு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
வேகமான மற்றும் நம்பகமான இணைய சேவைகள், டெலிமெடிசின், இ-கவர்னன்ஸ், கல்வி முயற்சிகள், டிஜிட்டல் வங்கி, டிஜிட்டல் கரன்சி பயன்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு போன்றவற்றுக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதைத் தொடர்ந்து, ஜனவரி 3-ம் தேதி பிரதமர் மோடி கேரளா செல்கிறார். அங்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்காக நடைபெறும் பாராட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் 2 லட்சம் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.