இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இல்லாமல் இருந்திருந்தால், அரேபிய கடல் பகுதியில் உள்ள வெப்பமண்டல சொர்க்கமான லட்சத்தீவுகள் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டிருக்கும்.
சுதந்திரத்திற்கு முன், துணைக் கண்டம் நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களாகப் பிரிக்கப்பட்டது, அவை அனைத்தும் இந்திய ஒன்றியத்தில் சேர ஆர்வமாக இல்லை.சர்தார் பட்டேலின் இடைவிடாத இராஜதந்திரம் பலனளித்தது, அவர் இந்த சமஸ்தானங்களில் உள்ள அரச அதிகாரிகளைச் சந்தித்து சுதந்திர இந்தியாவில் சேர்ந்தால் அரச குடும்பங்களின் மாண்பு மேலோங்கும் என்று கூறினார்.
இந்நிலையில் சுதந்திரத்தின் போது லட்சத்தீவு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்தது.இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்ற பின்னர், துணைக் கண்டமானது, கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று பிரிந்தன. இந்த இரண்டு பகுதிகளிலும் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் இருந்தனர்.
மேலும் கேரளாவில் இருந்து 496 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் லட்சத்தீவில் 93 சதவீதம் முஸ்லிம்கள் இருந்தனர். ஆரம்பத்தில் இதன் மீது அக்கறை செலுத்தாத முகமது அலி ஜின்னா பின்னர் லட்சத்தீவு மீதும் தனது கவனத்தை திருப்பினார்.
தங்களது கொடியை ஏற்றிய கப்பலை லட்சத்தீவுக்கு பாகிஸ்தான் அனுப்பியது. இதுகுறித்து சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கடலூரில் இருந்த முதலியார் சகோதரர்கள் ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் லட்சுமணன் சாமி முதலியார் இருவரையும் திருவாங்கூர் சமஸ்தானத்திடம் பேசிவிட்டு, மக்களை திரட்டிக் கொண்டு லட்சத்தீவு சென்று மூவர்ணக் கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டார். உடனடியாக அவர்கள் இருவரும் அதனை நிறைவேற்றினர்.
லட்சத்தீவுகளைப் பற்றிய பழைமையான குறிப்பு புறநானூற்றில் காணப்படுகிறது. மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர் ஆளுகையில் இருந்ததாக தெரிவிக்கிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததாக காட்டுகிறது. கேரளத்தின் கடைசி சேர மன்னரான சேரமான் பெருமாள் காலத்தில் இந்த தீவுகளில் முதல் குடியேற்றங்கள் நிகழ்ந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மாநில மறுசீரமைப்பின் போது லட்சத் தீவுகள் சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து, நிர்வாக நோக்கங்களுக்காக ஒரு தனி யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது. 1973 நவம்பர் 1ஆம் தேதி லட்சத்தீவுகள், மினிகோய் மற்றும் அமிண்டிவி தீவுகள் ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இலட்சத்தீவுகள் என அழைக்கப்பட்டது. தற்போது பிரதமர் மோடியின் பயணத்தை தொடர்ந்து லட்சத்தீவுகள் மீதான கவனம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.