அயோத்தி ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வேன்’ என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
அன்றைய தினம் நண்பகல்12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில் நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இந்த நிலையில் ‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வேன்’ என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அயோத்தி தொடர்பாக அரசியல்வாதிகள் பேசுவது என்பது வேறுவிதமான விஷயம். ஆனால் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது என்பதே சரியான விஷயம். தற்போது இந்த கோவில் கட்டப்படுவது என்பது நம் வாழ்நாளில் கிடைத்த அதிர்ஷ்டம்.
இதனால் நாம் அனைவரும் அங்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். யார் அங்கு சென்றாலும், செல்லாமல் இருந்தாலும் கூட எனக்கு கடவுள் ராமர் மீது நம்பிக்கை உண்டு என்பதை கூறி கொள்ள விரும்புகிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவர் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவன் நான். இதனால் நான் ராமர் கோவிலுக்கு கண்டிப்பாக செல்வேன்.
எந்தக் கட்சி அங்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் எனது நிலைப்பாடு என்பது ஒன்று தான். நான் கோவிலுக்கு செல்வேன். காங்கிரஸ் செல்ல விரும்பினால் செல்லலாம். செல்ல விரும்பாவிட்டாலும் அந்த முடிவை சுதந்திரமாக எடுக்கலாம்.
இந்த கருத்து என்பது அனைவருக்கும் பொருந்தும். அதேவேளையில் நான் அயோத்தி ராமர் கோவில் செல்வதில் யாருக்காது பிரச்சனை என்றால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் கடவுள் மீது தீவிர நம்பிக்கை கொண்டவன். என் வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அது எல்லாம் கடவுளின் கிருபையே. எனவே நான் அயோத்தி சென்று ராமரின் ஆசீர்வாதத்தை பெறுவேன்.
மேலும் மக்கள் அனைவரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரில் அல்லது தொலைக்காட்சியில் பார்த்து ஆசீர்வாதம் பெற வேண்டும். உண்மையில் கும்பாபிஷேக நாள் என்பது வரலாற்று சிறப்புமிக்க நாள். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். ராமர் பிறந்த இடத்தில் அவருக்குக் கோயில் கட்டப்படுவது பெரிய விஷயம். அனைவரும் அங்கு செல்ல வேண்டும்” என கூறினார்.