மோடி அரசின் முயற்சியால் மத்திய ஆயுதப் படையில் கடந்த 9 ஆண்டுகளில் 1.75 லட்சம் புதிய ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து முற்றிலுமாக விடுபடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூரில் சசாஸ்திர சீமா பலின் (SSB) 60-வது எழுச்சி நாள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். தொடர்ந்து, பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா, தபால் தலையையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டில் நக்சல்கள் நடமாட்டத்தைக் குறைப்பதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்.) மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) ஆகியவற்றுடன் சசாஸ்திர சீமா பலின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
சசாஸ்திர சீமா பலின், சர்வதேச எல்லைகளைக் காப்பது மட்டுமல்லாமல், நாட்டின் எல்லைப் பகுதிகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் மிக முக்கியப் பங்காற்றுகிறது. எல்லைப் பாதுகாப்புடன், சசாஸ்திர சீமா பலின், தனது முயற்சிகளில் உள்ளூர் மக்களின் பங்களிப்பையும் உறுதி செய்கிறது.
எல்லைப் பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை மீட்டெடுப்பதில் சசாஸ்திர சீமா பலின் வீரர்களின் பங்கு பாராட்டத்தக்கது. மோடி அரசின் முயற்சியால் மத்திய ஆயுதப் படையில் கடந்த 9 ஆண்டுகளில் 1.75 லட்சம் புதிய ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குற்றவியல் சட்டங்கள் தொடர்பான 3 முக்கிய மசோதாக்களில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் விரைவான நீதியை உறுதி செய்யும். இனிமேல் 3 ஆண்டுகளுக்குள் எஃப்.ஐ.ஆர். மீதான பிரச்சனை தீர்க்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து விடுபடும்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.