பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன், சுமைகள் உள்ளிட்ட பொருள்களை ஒப்படைக்க அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக விளங்குவது பழனி முருகன் கோயில். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வருகை தருவார்கள்.
இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. 8-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்து செல்கின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து கால் நடையாக சென்று முருகனை தரிசிப்பார்கள்.
இதனிடையே பழனி மலைக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் செல்போனை ஒப்படைத்து செல்கின்றனர். அதற்கு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் செல்போனை ஒப்படைக்கவும், திரும்ப பெறவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதேபோல், பக்தர்கள் சுமைகளை வேறு ஒரு இடத்திலும், காலணிகளை மற்றொரு இடத்திலும் ஒப்படைத்து செல்ல வேண்டியுள்ளது. அதாவது ஒருவர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் 3 வெவ்வேறு இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பொருள்களை ஒப்டைக்க வேண்டி இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல் ஒப்படைத்த பொருள்களை திரும்பப் பெற மீண்டும் 3 இடங்களுக்கு அலைய வேண்டி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முருகனை தரிசிப்பதற்கு ரூ.200, ரூ.100 உள்ளிட்ட தரிசன டிக்கெட் பெற்றாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காத்திருக்கும் இடங்களில் முறையான பேன் வசதி செய்யப்படவில்லை என்றும், சில இடங்களில் பேன் இருந்தும் செயல்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டண தரிசன டிக்கெட் பெற்று காத்திருக்கும் நேரத்தில் அவசரத்திற்குக் கூட வெளியே செல்ல முடியவில்லை என்றும், இதனால் வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே பக்தர்களுக்கு குடிநீர், காற்றோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.