திமுக ஆட்சியில் தொடர்ந்து மோசமான நிலைக்கு சட்டம் ஒழுங்கு செல்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகில் உள்ள கல்லுவழி என்ற கிராமத்தில், நள்ளிரவில் வீடு புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை கொடூரமாக வெட்டி, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியில், பொதுமக்கள் உயிர்ப் பாதுகாப்பு என்பது மிகப்பெரும் கேள்விக்குரியதாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு இதை விடக் கீழ்நிலைக்குச் செல்ல முடியாது என்று இருக்கையில், தினந்தோறும் நடைபெறும் குற்றச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை இன்னும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்கின்றன.
சட்டம் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், யாருக்கோ கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். திமுக அரசின் கையாலாகாத்தனத்தால், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஒரு அரசின் அடிப்படைக் கடமையான, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாடல் அரசுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.