தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் எனவும், மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றம் வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நெய்வேலி தொகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
என் மண் என் மக்கள் பயணம், திருச்சிற்றம்பலமுடையான் நடராஜர் கோவில் அமைந்திருக்கும் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில், பொதுமக்கள் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. 10 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட 2420 கிலோ நடராஜர் சிலை அமைந்திருக்கும் திருக்கோவில். வேலோடு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோவிலில், கையில் வில்லோடு அருள்பாலிக்கிறார்.
தமிழகத்தில் இந்த குடும்ப அரசியல், ஊழல் அரசியல் ஒழிய வேண்டும். மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றம் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பத்து ஆண்டுகளாக, ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சி வழங்கி வருகிறார். தமிழகத்தில் தூயதோர் அரசியலை, பாஜக மட்டுமே முன்னெடுக்கிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் பாரதப் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தும் வகையில், பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழக மக்களின் பிரச்சினைகளை, தமிழக பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் எடுத்துக் கூறி, அவற்றிற்கான தீர்வுகளைக் கொண்டு வருவார்கள் என்பது உறுதி.
முன்னதாக புவனகிரியில் பேசிய அண்ணாமலை, அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால், பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளித்து விடுவரா என்று கேட்கின்றனர். நம்முடைய சரித்திரத்தையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மீட்டெடுப்பது தான் முக்கிய நோக்கம்.
மேலும், அயோத்தி ராமர் கோவில் வாயிலாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு வரவிருக்கும் வருமானம் 25,000 கோடி ரூபாயாக இருக்கும்.அயோத்தி ராமர் கோவில் வாயிலாக மத வேறுபாடின்றி, அம்மாநில மக்கள் வாழ்வாதாரம் உயரும். அதைத்தான் பிரதமர் மோடி முன்னிறுத்துகிறார்.
தமிழகம் ஆன்மிகத்தின் தலைநகரம். தமிழகத்தில் இல்லாத கோவில்களா? தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களை எல்லாம் இணைத்து, போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால், ஒரு ஆண்டிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருமானம் தமிழகத்திற்கு கிடைக்கும்.
ஆனால், இவற்றை பற்றி சிந்திக்காமல், கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பதையும், கோவில் உண்டியல் பணத்தை திருடுவதையும் மட்டும் தான் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க இருக்கும் வரை, தி.மு.க.,வின் ஹிந்து விரோத எண்ணம் பலிக்காது.
தொண்டர்களுக்கோ, இளைஞர்களுக்கோ அக்கட்சியில் முக்கியத்துவம் எதுவும் இல்லை. அக்கட்சியில் பதவியில் இருக்கும் வாரிசுகளுக்கு மட்டும் தான் எல்லாமே நடக்கிறது. தமிழகத்தில் முழுமையாக சட்டம் – ஒழுங்கு கெட்டிருக்கிறது என்பதற்கு, தினந்தோறும் பத்திரிகைகளில் வெளியாகும் கொலை, கொள்ளை சம்பவங்களே சாட்சி. ஆனால், தமிழகத்தில் சிறப்பான திராவிட ஆட்சி நடப்பதாக, முதல்வர் தனக்குத் தானே தோளில் தட்டி பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் மக்கள் எப்படி இருக்கின்றனர் என்பது குறித்த உண்மையான தகவல் எதுவும் அவருக்கு போய் சேருவதில்லை. யாரோ கொடுக்கும் பொய்யான தகவலை நம்பி, கொடுமையான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, விரைவில் வீழ்த்தப்பட வேண்டும்.
அன்றைய நாள் தான், தமிழகத்துக்கான விடிவு. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை, மக்களிடம் காணும் எழுச்சி வாயிலாக நடைபயணத்தின் போது உணருகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.