அரசியல் லாபத்திற்காக தமிழகத்தில் மதவெறியை திமுக ஊட்டி வளர்ப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்ட அவர் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது,
தமிழகத்தின் தோல் ஏற்றுமதியில் 30 சதவீதம், ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகள் பங்கு வகிக்கின்றன. வாணியம்பாடியில் உள்ள கழிவு நீர் பிரச்சனை, ஆம்பூரிலும் உள்ளது. நீரில் தோல் தொழிற்சாலை கழிவுகள் கலந்தால், குடிநீர், விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்குப் பயன்படாத நீராக மாறிவிடும்.
ஆம்பூர் வாணியம்பாடியில் பாலாற்று கரையில் விவசாயம் செய்வோர் அனைவரையும் விவசாயத்தை விட்டு வெளியேற்றுவதில் தான் திமுக அரசு குறியாக இருக்கிறது. போதிய சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கவும், அவை சரியாக செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும் திமுக அரசு தவறிவிட்டது.
நமது பாரதப் பிரதமர், தமது நல்லாட்சியாலும், வெளியுறவுக் கொள்கைகளாலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாலும் உலக நாடுகளின் தலைவர்களால் பாராட்டப்படுவதோடு, உலக நாடுகளின் 14 உயரிய விருதுகளால் பெருமைப்படுத்தப்பட்டவர். அவற்றில் 6 விருதுகளை வழங்கியது இஸ்லாமிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, அபுதாபி அரசர், எகிப்து நாட்டுத் தலைவர், இஸ்லாமிய உலக லீக்கின் தலைவர் என முக்கியமான இஸ்லாமியத் தலைவர்கள், நமது பிரதமரை நெருங்கிய நண்பராகக் கருதுகிறார்கள். ஆனால் தமிழகக் கட்சிகள், நமது பிரதமரை மதவாதி என்று கூறுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, காங்கிரஸ் ஆட்சியில், மத்திய அரசு பணிகளில் மொத்தம் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தனர். தற்போது அது 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் 31 சதவீத வீடுகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 36 சதவீதம் சிறுபான்மையினர்.
பிரதமரின் விவசாய கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெறுவோரில் 33 சதவீதம் பேர் சிறுபான்மையினர். பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் பயன்பெறுவோரில் 37 சதவீதம் பேர் சிறுபான்மையினர் என, காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியை விட, பாரதப் பிரதமர் தலைமையிலான மத்திய அரசின் நலத்திட்டங்கள், சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளன.
முக்கியமான இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் ஒழிக்கப்பட்டுள்ள, சிறுபான்மை சகோதரிகளுக்கெதிரான முத்தலாக் முறையை இந்தியாவிலும் நீக்கியவர் நமது பிரதமர் மோடி.
அன்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்த பிரிவினையை, இன்று திமுக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் செய்து வருகின்றன. வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்த்துள்ளது திமுக. சிறுபான்மையினருக்கு திமுக என்ன செய்துள்ளது என்று கேட்டால், ஒரு சாலைக்கும், ஒரு நுழைவாயிலுக்கும் பெயர் வைத்ததை விட, சிறுபான்மை மக்கள் முன்னேற்றத்துக்கு எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், கடந்த 2022 – இல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 60% கமிஷன் வேண்டும் என்று கேட்ட காணொளி வெளியானது. திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் 50 சதவீதம் தான் வாங்கினாலும், தனக்கு 60 சதவீதம் கமிஷன் வேண்டும் என்று உரிமையுடன் கேட்கிறார். இது தான் இவரது மக்கள் பணி. இவர் செய்யும் மற்றொரு பணி, நிலஅபகரிப்பு.
கடந்த 2022 ஆம் ஆண்டு, ஒரு முதியவருக்குச் சொந்தமான 3 சென்ட் நிலத்தை, வில்வநாதன் அபகரிக்க முயற்சித்து, காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, அந்த முதியவர் தீக்குளிக்க முயற்சித்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மகேஷ் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கட்டாயப்படுத்தி வாங்கினார் என இவரது நில அபகரிப்புப் பணிகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது.
திமுக மூத்த தலைவர் துரை முருகனின் மகன் என்பதைத் தவிர எந்தத் தகுதியும் இல்லாதவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த். இந்த இருவரும் மக்களுக்காக எந்தப் பணிகளுமே செய்ததில்லை.
வரும் பாராளுமன்றத் தேர்தல், ஊழலற்ற நல்லாட்சி வழங்கி வரும் பாரதப் பிரதமர் மோடிக்கும், ஊழல் ஒன்றையே நோக்கமாக வைத்திருக்கும் திமுக கூட்டணிக்கும் இடையேயான தேர்தல். பத்தாண்டு காலமாக நல்லாட்சி தந்த நமது பிரதமர் மோடி , மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை தமிழகமும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.