2024 – நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என டெல்லியிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. இதனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிக்குத் தயாராகி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. திமுகவில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
வரும் தேர்தலில் இந்த கட்சிகள் கடந்த முறை வழங்கிய சீட்டைவிட இந்த முறை அதிக தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய உள்ளது.
கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. அந்த வகையில், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
அதாவது, தலைநகரில் பிப்ரவரி 3 -ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும், பிப்ரவரி 4 ம் தேதி கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளைக் கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்தாக கூறப்படுகிறது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்தே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும், அதுவும் திமுகவுக்குத் தோல்வி தரும் தொகுதியை ஒதுக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்களாம். இதனால், திமுக கூட்டணியில் இப்போதே குழப்பம் ஏற்பட்டுள்ளது.